கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்...முகாமில் தங்கியுள்ள மக்கள்!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்...முகாமில் தங்கியுள்ள மக்கள்!

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆறாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரியில் வெள்ளம்

கர்நாடகா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது.   அணையின் பாதுகாப்பு கருதி வெள்ளநீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது.

இந்நிலையில் ஆற்றின் கரையில் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை முதலைமேடுதிட்டு, வெள்ளை மணல், கோரைதிட்டு உள்ளிட்ட  கிராமங்கள் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, தாழ்வான பகுதி மக்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தனர்.

மீண்டும் முகாமிற்குத் திரும்பிய மக்கள்

நேற்று முன்தினம்  காலை தண்ணீரின் அளவு குறைந்ததால் நிவாரண முகங்களில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய நிலையில், நேற்று அதிகாலை  முதல் மீண்டும் வெள்ள நீரின் அளவு படிப்படியாக உயர துவங்கியது. 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றின் வழியே சென்று பழையாறு கடலில் கலந்து வருகிறது.

இதன் காரணமாக மீண்டும் கிராமங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால், முகாமிலிருந்து  வீட்டிற்கு திரும்பிய தாழ்வான பகுதியில் வசிக்கும்  மக்கள் மீண்டும் உடமைகளுடன் முகாமுக்கு  வந்தனர்.  

தீபாவளியன்று முகாம்களில் மக்கள்

இந்நிலையில் வீடுகளை  வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால், முகாம்களில் தங்கியுள்ள மக்கள்  திட்டு பகுதி கிராமத்தில்  இருந்து வெளியூர்களில் பணியாற்றி வரும் இளைஞர்கள் உள்ளிட்டோர் தீபாவளி விடுமுறைக்காக தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்திருந்தனர். இந்நிலையில் வீடுகள் வெள்ளநீர் சூழ்ந்து உள்ளதை கண்டு வேதனை அடைந்தனர்.

இன்று தீபாவளி பண்டிகையையொட்டி முகாம்களின் தங்கி இருந்த மக்கள்,  காலை தண்ணீர் சூழ்ந்த தங்கள் வீடுகளுக்கு சென்று வழிபாடு செய்தனர். ஆனால் வீடுகளை விட்டு முகாம்களின் தங்கி இருப்பதால் புத்தாடைகள் ஏதும் மக்கள் அணியாமல் வழிபாடு செய்து விட்டு மீண்டும் முகாமுக்கு திரும்பினர்.முகாம்களிலேயே ஏக்கத்துடன் தீபாவளி பொழுதை கழித்து வருகின்றனர்.        .