அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்!

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்!

1969ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் 1973ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய போது ஓ.பி.எஸ் தன்னை அதில் இணைத்துக் கொண்டார்.

பெரியகுளம் நகர்மன்றத் தலைவர்

தனது நீண்டகால அரசியல் செயல்பாட்டின் வழியாக 1996ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்த்தெடுக்கப்பட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் வழக்குகள் இருந்ததால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தச் சூழலில் தான் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் நிழல் தலைமையாக செயல்பட்ட சசிகலா ஆகியோரால் முதலமைச்சராக்கப்பட்டார்.

பிறகு அமைந்த ஜெயலலிதாவின் அனைத்து அமைச்சரவையிலும் முக்கிய இடம் பிடித்தார் பன்னீர்செல்வம். கட்சியிலும் செல்வாக்குமிக்க நபராக உயர்ந்தார்.

மீண்டும் முதல்வர்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என 2014ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் பதவியிலிருந்து  விலகினார் ஜெயலலிதா.

சிறைக்குச் செல்லும் முன்பே தனது விசுவாசியான  ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். 2015 ஆம் ஆண்டு மே மாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரும் வ்ழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அது வரை ஓ.பன்னீர்செல்வம் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீடித்தார்.

 

ஜெயலலிதா மரணம்…மூன்றாவது முறையாக முதல்வர்

2016ஆம் ஆண்டு டிசம்பர் 05 அன்று உடல்நலக் குறைவால் ஜெயலலிதா மரணமடைந்தார். அன்று இரவே ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சரானார்.

சசிகலா – பன்னீர்செல்வம் மோதல்

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வராக பதவியேற்கவும் முயன்றார். அப்போது பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலக மறுத்தார். பாஜகவின் துணையுடன் சசிகலாவிடம் முரண்பட்டார். இந்நிலையில் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கினார்.

இரட்டைத் தலைமையிலிருந்து ஒற்றைத் தலைமை நோக்கி

சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்தனர். அதிமுகவில் முதன் முதலாக இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் பொறுப்பேற்றனர்.

தொடக்கத்தில் இருந்தே ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இடையே முரண்பாடு நிலவி வந்தது. கடந்த சில நாட்களாக அதிமுக பலவீனமாக இருக்கிறதென்றும் ஒற்றைத் தலைமையின் கீழ் கட்ச்ஹி செயல்பட வேண்டும் என அக்கட்சித் தொண்டர்களிடையே கருத்து நிலவியது.

அதிமுக தொண்டர்களிடையே அதிக செல்வாக்கு படைத்தவராக எடப்பாடி பழனிச்சாமி உருவெடுத்துள்ளார். அவர் தான் கட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். அதிமுக பொதுக்குழு கூடினால் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கும் என்பதால் கட்சியில் தனது நிலை குறித்து அச்சத்தில் உள்ளார் பன்னீர்செல்வம்.

தொடர்ந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு, கட்சியில் ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலை என செல்வாக்கோடு இருந்த ஓ.பன்னீர்செல்வம் மெல்ல மெல்ல தனது பிடியை இழந்து தற்போது சொந்தக் கட்சியினராலேயே ஓரங்கட்டப்பட்டுள்ளார்

 - ஜோஸ்