ராகுல் காந்தி நடைபயணம் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்-கனிமொழி!

தமிழ்நாடு அரசு எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை வழங்கிக் கொண்டிருக்கிறது

ராகுல் காந்தி நடைபயணம் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்-கனிமொழி!

காங்கிரஸ் கட்சியின் முதன்மையான தலைவர்களில் ஒருவான ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை நடைபயணம் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சிக்கு பலமாக இருக்கும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

எழுத்தாளருக்கு மணிமண்டபம்

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா என்று அழைக்கப்படும் சாகித்திய அகடாமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒரு கோடியே ஐம்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் , விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

சாகித்ய அகாதமி விருது பெற்றவர்களுக்கு வீடு

பின்னர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் பேசுகையில், எழுத்தாளர்களுக்கு பொதுவாக பதிப்பாளர்கள் தான் ராயல்டி வழங்குவது வழக்கம். மற்ற மாநிலங்களில் என்ன நடைமுறை இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ்நாடு அரசு எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை வழங்கிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கி.ராவிற்கு செலுத்தக்கூடிய மரியாதை தான் இந்த மணிமண்டபம் என்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் திட்டத்தையும் நம்முடைய முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு பலம்

எழுத்தாளர்கள், தமிழ் மொழிக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. கி.ரா. மணிமண்டபணிவுகள் முடிவடைந்த பின்னர் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னர் அவர் வருகை குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ராகுல் காந்தி நடைபயணம் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சிக்கு பலமாக இருக்கும் என்றார்