மாணவனை தத்துக் கொடுத்த பள்ளி நிர்வாகம்...பெற்றோர் அதிர்ச்சி!

மாணவனை தத்துக் கொடுத்த பள்ளி நிர்வாகம்...பெற்றோர் அதிர்ச்சி!

புதுச்சேரியில் அரசு உதவிபெறும் பள்ளியில் தங்கி படிக்க வைத்த, விழுப்புரத்தை சேர்ந்த மாணவனை பெற்றோரிடம் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகம் வெறொருவருக்கு தத்து கொடுத்துவிட்டதாக  கூறி மாணவரின் உறவினர்கள் பள்ளியின் நிர்வாகத்தை கண்டித்து தர்ணாவில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ்டாண்டர் - பவுலின் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன் மூன்று மகள் உள்ளனர், செண்டரிங் வேலை செய்து வந்த  அலெக்ஸாண்டர் கடந்த 2011 ஆம் வேலை காரணமாக பெங்களூர் சென்றதால் தன் 2 மகன்களை தனது தாயார் ரெஜினாமேரியிடம் விட்டுவிட்டு சென்றுள்ளார். அப்போது தனது இரண்டாவது மகனை ரெஜினா மேரி  புதுச்சேரி நகர பகுதியில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை படிப்பதற்காக சேர்த்துள்ளார். பின்னர்  வருடம் இரு முறை உறவினர்கள் வந்து பார்த்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

மேற்படிப்பிற்காக வெளிநாடு அனுப்பியுள்ளதாக தகவல்

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரெஜினா மேரி தனது பேரன் ஹாணஸ்ட் ராஜை பார்க்க வந்த போது பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த பாதரியார் ஒருவர் மேற்படிப்பிற்காக ஐந்து மாணவர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்ப உள்ளதாகவும் தனது பேரனையும் தேர்வு செய்துள்ளதாக கூறி வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். இதனை அடுத்து அதே வருடம் செப்டமர் மாதம் வந்து பார்த்த போது உங்களது பேரன் வெளிநாடு சென்று விட்டதாகவும் தெரிவித்த நிர்வாகம் 2 வருடங்கள் கழித்து வந்து பார்க்குமாறு கூறியுள்ளது. இதனை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு வந்த போது கொரோனாவை காரணம் காட்டி அவர்களை திருப்பி அனுப்பியதாகவும், ஒரு முறை மட்டும் ஹானஸ்ட் ராஜிடம் தொலைபேசி மூலம் பேச வைத்ததாகவும், தற்போது வந்து கேட்டால் மாணவனை தத்து கொடுத்ததாக கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு இப்போது ஏன் வந்து கேட்கிறீர்கள் என பள்ளி நிர்வாகம் கேட்டதாக தெரிவித்தனர் மாணவனின் பெற்றோர். 

காவல் நிலையத்தில் புகார்

இது குறித்து பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தங்களின் மகனை உடனடியாக மீட்டுத் தரக் கோரியும் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 30 க்கும் மேற்பட்டோர் பள்ளி நிர்வாகத்தின் அலுவலகம் அமைந்திருக்கும் புதுச்சேரி கப்ஸ் ஆலயம் வாயிலில் தர்னாவில் ஈடுப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரிய கடை போலிசார் தர்னாவில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவனை தத்து கொடுத்துவிட்டதாக அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.