மூச்சுள்ளவரை கொடி பாதுகாவலனாய் இருப்பேன்… உருமாறிய மநீம.ஐ விரைவில் காண்பீர்…கமல் நம்பிக்கை!!

எனது மூச்சு உள்ளவரை, மக்கள் நீதி மய்யம் கொடிக்கு பாதுகாவலனாய் இருப்பேன் என கூறி, நடிகரும், அக்கட்சி தலைவருமான கமலஹாசன் உருக்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக உள்ளார் கமலஹாசன். அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் அவரது கட்சியோ கூட்டணி கட்சிகளோ ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமலஹாசனும், தட்டி முட்டி முன்னுக்கு வந்தும், இறுதி சுற்றில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில், அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலரும் அக்கட்சியை விட்டு வெளியேறினர். இதனால் கமல் சீக்கிரம் தனது கூடாரத்தை கலைத்து, தனது நடிப்பு தொழிலுக்கு திரும்பி விடுவாரோ என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக அக்கட்சியின் துணை தலைவர் பொறுப்பு வகித்த மகேந்திரன் என்பவர் அக்கட்சியை விட்டு விலகியதோடு மட்டுமல்லாது, அக்கட்சி பற்றி அதிருப்தி தகவல்களை வெளியிட்டு வந்தார். அதுமட்டுமல்லாது விரைவில் அவர் திமுகவில் இணைவார் என்ற தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில், உயிருள்ள வரை மக்கள் நீதி மய்யத்தின் கொடியின் பாதுகாவலனாய் இருப்பேன் என நெஞ்சில் உறுதி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப்பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். முக அறிமுகம் இல்லாதவர்களை மக்களிடம் மின்ன வைக்க நான் நினைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகாரமாய் தெரிகிறது. கூட்டணி வைத்துக் கொள்வதில் நான் காட்டிய வெளிப்படை தன்மை அனைவரும் அறிந்ததே. தோல்வியை கொட்ட குழி தேடுவது ஜனநாயகம் அல்ல. நாடோடிகள் ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்கள் வியாபாரம் முடியும் வரை மட்டுமே தங்குவார்கள். பொய் குற்றச்சாட்டுகளுக்கு காலம் பதில் சொல்லும். தொண்டர்கள் நம் தரம் குறையாமல் வாதாடலாம். உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை விரைவில் காண்பார்கள். உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும்வரை மநீம இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

மூச்சுள்ளவரை கொடி பாதுகாவலனாய் இருப்பேன்… உருமாறிய மநீம.ஐ விரைவில் காண்பீர்…கமல் நம்பிக்கை!!