எடப்பாடி! வராதீர்! வராதீர்..! ஓபிஎஸ் கோட்டையில் ஈபிஎஸ்க்கு எதிர்ப்பு..!

எடப்பாடி! வராதீர்! வராதீர்..! ஓபிஎஸ் கோட்டையில் ஈபிஎஸ்க்கு எதிர்ப்பு..!

அதிமுகவின் இடைகாலப் பொதுச்செயலாளரானா பின்னர் முதல் முறையாக தெற்கு தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.  அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஓபிஎஸ் vs ஈபிஎஸ்:

அதிமுகவில் பல குழப்பங்களுக்கு இடையில் ஜூலை 11 இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைகாலப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கமா?எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை!

சுற்றுப்பயணம்:

அதிமுக தொண்டர்களிடம் ஆதரவு யாருக்கு என்பதை நிரூபிக்கும் போட்டியில் ஈபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவின் இடைகாலப் பொதுச்செயலாளராக முதல் முறை தென் தமிழ்நாடு மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். மதுரை விமான நிலையம் சென்ற அவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர்.

பெரும் கூட்டம்:

மேற்கு தமிழ்நாடு ஈபிஎஸ் கோட்டையாகவும், தெற்கு தமிழ்நாடு  ஓ.பன்னீர்செல்வத்தின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. எனவே தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியை விட தங்களுக்கு பலம் அதிகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறிவரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாபெரும் கூட்டத்தை திரட்ட எடப்பாடி பழனிசாமியின் தென்மாவட்ட ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.

போஸ்டர்கள்:

ஈபிஎஸ் இன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மறவர் கூட்டமைப்பு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 115 சாதியினை வஞ்சித்து விட்டு ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கிய எடப்பாடி! எங்கள் மாவட்டத்திற்கு வராதே! வராதே! வராதே! என குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்த போஸ்டர்கள் அதிமுக நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடஒதுக்கீடு:

கடந்த அதிமுக ஆட்சியின் காலத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 20% இட ஒதுக்கீட்டில் மறவர், வலையர்,தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சாதியினருக்கு எதிராக வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வன்னியருக்கு ஒதுக்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.