உறவுகள் இருந்தும் கண்டுகொள்ளாத சோகம்.. பொறாமையால் கொலையை அரங்கேற்றிய 6 பேர்.. மறுவாழ்வு மையத்தில் நடந்த பயங்கரம்!!

உறவுகள் இருந்தும் கண்டுகொள்ளாத சோகம்.. பொறாமையால் கொலையை அரங்கேற்றிய 6 பேர்.. மறுவாழ்வு மையத்தில் நடந்த பயங்கரம்!!

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள மலையாண்டிபுரத்தில் பிரபல மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இங்கு சிகிச்சை பெற்று வந்தவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறையை சேர்ந்த மணிவாசகம்.  அரியலூரில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு போதைப்பழக்கம் இருந்ததன் காரணமாக குடும்பத்தினர் அவரை இந்த மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.

இதே மையத்தில்  ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த பாலமுருகன், பாஸ்கர், ரவி, ஈரோடை சேர்ந்த சந்திரசேகர், கொடைக்கானலை சேர்ந்த கோபிநாத், மேலூரை சேர்ந்த பெரோஸ்கான்  ஆகிய 6 பேரும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். 

இவர்கள் போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டுவிட்டதாக கூறப்பட்டபோதிலும், குடும்பத்தினர் அவர்களை ஏற்கவில்லை. இதனால் அவர்கள் 6 பேரும் மையத்திலேயே தங்கி வந்துள்ளனர். இவர்களுக்கும் முன்னாள் தலைமை ஆசிரியர் மணிவாசகத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மணிவாசகத்தை அடிக்கடி உறவினர்கள் பார்க்க வந்துள்ளனர். மேலும் அவருக்கு தின்பண்டங்களையும் வாங்கி கொடுத்துள்ளனர். இதனை அந்த 6 பேருக்கும் மணிவாசகம் கொடுக்கமாட்டார் என தெரிகிறது. மேலும் தன்னை அடிக்கடி தனது உறவினர்கள் சந்திக்க வருவதை அவர் பெருமையாக 6 பேரிடம் பேசி வெறுப்பேற்றி வந்துள்ளார்.

மேலும் 6 பேரும் மையத்திலிருந்து தப்பிக்க முயன்று திட்டங்களை வகுத்தும், அதனை நடத்தி வந்த அதிகாரிகளிடம் மணிவாசகம் தெரிவித்து அவர்கள் பிளானை முறியடித்துள்ளார். இதனால் தீராத பகையில் இருந்த 6 பேரும் சம்பவத்தன்று, மணிவாசகத்தை அடித்தே கொலை செய்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார், வழக்கு பதிந்துள்ளனர்.