சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகை மீட்டுத் தர மீனவர்கள் கோரிக்கை!

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகை மீட்டுத் தர மீனவர்கள் கோரிக்கை!

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கடலுக்குச் சென்ற அக்கரைப்பேட்டை மீனவர்கள்

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கீச்சாங்குப்பத்தை சேர்ந்த நாகேந்திரன்(35) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 6 ஆம் தேதி இரவு மீன்பிடிக்க 9 பேர் சென்றனர். 130 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த காமராஜ். பூவரசன் அன்பு அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்லையன், பாலு, செல்லத்துரை , முருகானந்தம் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து திரிகோணமலை துறைமுகம் அழைத்துச் சென்றனர். அவர்கள் சென்ற விசைப்படகு மற்றும் மீன்பிடி வலைகள், உபகரணங்கள் ஆகியவற்றை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

இலங்கைச் சிறையில் மீனவர்கள்

இதை தொடர்ந்து 9 மீனவர்கள் திரிகோணமலை மைலாடி நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்படவுள்ளார்கள். இந்த நிலையில் மீனவர்கள் கைதால் நாகை மாவட்ட மீனவர்கள் சோகத்தில் உள்ளனர். வட்டிக்கு கடன் வாங்கி 10 குடும்பங்களும் அந்த படகை நம்பித்தான் உள்ளது என்றும், இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக படகு மற்றும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகை மாவட்டத்தை சேர்ந்த 8 படகுகள் இதுவரை இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், நடுக்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும் என்றும் நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக சிறீலங்கா கடற்படையின் அட்டூழியம் தொடர்வதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டினர்.