குமாரபாளையத்தை வெள்ளம் சூழ்ந்தது!

குமாரபாளையத்தை வெள்ளம் சூழ்ந்தது!

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்,பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் கரையோரம் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

கன மழை காரணமாக வெள்ளம்

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து 120 அடி எட்டிய நிலையில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வீதம் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் மணிமேகலை வீதி, கலைமகள் வீதி, இந்திராநகர்,குள்ளன் காடு, சின்னப்ப நாயக்கன்பாளையம், ஜனதாநகர்,நாட்டா கவுண்டன் புதூர்,காவிரி வீதி ஆகிய 20க்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி கரையோரம் உள்ள 250க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

இதனால் குடியிருப்புகளில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வருவாய்த் துறையினர் பாதுகாப்பாக மீட்டு ஐந்துக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.தொடர்ந்து இவர்களுக்கு மருத்துவ உதவி.,உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் வருவாய் துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு இடையே வெள்ளநீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளை கழுகு பார்வையில் பிரத்தியேகமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குமராபாளையம் முதல் பவானி வரை செல்லும் பழையபாலம், புதிய பாலம்,மற்றும் முக்கூடல் என அழைக்கப்படும் கூடுதுறை மற்றும் பள்ளிபாளையம் முதல் ஈரோடு செல்லும் பாலம் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

பாலத்தில் காவலர்கள் ரோந்து

இதில் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி காவிரி ஆற்றில் செல்லும் வெள்ள நீரை பார்வையிட்டு செல்பி எடுத்து வருகின்றனர்.தொடர்ந்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் பாலத்தில் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கரையோர குடியிருப்பு பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆண்டு தோறும் வெள்ளை நீரால்  பாதிப்புகளை சந்தித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு அரசின் சார்பில் நிரந்தரமாக வீட்டுமனை பட்டா வழங்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும்  உள்ளது.