அமைச்சர்களை முதலமைச்சர் விசாரிக்க வேண்டும் - கார்த்தி சிதம்பரம் பளீர்..!

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, அதிமுக, திமுக, பாஜக குறித்து பல பரபர தகவல்களை கூறியுள்ளார்.
வாய்ப்பில்லை:
"காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்துவது வரவேற்கதக்கது. தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் காசிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தாலும் இதை வைத்து பாஜக அரசியல் ரீதியாக வளரலாம் என்று நினைத்தால் அது நடப்பதற்கு வாய்ப்பில்லை. இதை விளம்பரமாகத் தான் செய்ய முடியுமே தவிர மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது என கூறியுள்ளார்.
எனக்கு கொடுத்தால்..:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் சமீபத்தில் நடந்த சம்பவம் குறித்து பேசிய கார்த்தி சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி என்பது நியமன பதவி தான்.. தேர்தல் வைத்து தலைவரை தேர்ந்தெடுப்பது கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை தன்னிடம் தந்தால், சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் எனக் கூறியவர், சத்தியமூர்த்திபவன் சம்பவம் வருத்தம் தரக்கூடியது என்றும், அதனை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுமென நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விசாரிக்க வேண்டும்:
திமுகவில் நிதி அமைச்சருக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர், மின்சார துறை அமைச்சர் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளதை தமிழ்நாடு முதலமைச்சர் விசாரணை செய்து அமைச்சர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியவர், டாஸ்மார்க் விற்பனை அதிக அளவில் நடக்கும்போது அந்த நிதி தன்னுடைய துறைக்கு வரவில்லை என்று நிதி அமைச்சர் கூறுவது வியக்கத்தக்கதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வேடிக்கையாக உள்ளது:
அதிமுக விவகாரத்தில், இரட்டை தலைமை அந்த கட்சிக்கு ஒத்து வராது என்று பலமுறை நான் கூறியுள்ளேன். அது வழி தான் நடந்து வருகிறது. அதிமுகவில் நடப்பது வேடிக்கையாக உள்ளது. அதிமுகவை வீழ்த்திவிட்டு பாஜக வளர வேண்டும் என்று நினைத்தால் அது தவறாகத் தான் முடியும். தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி ஒரு எல்லை தான் எல்லையைத் தாண்டி அவர்களால் வர முடியாது. பாஜக எந்த யுக்தியைப் பயன்படுத்தினாலும் தமிழ்நாடு மக்கள் மனதில் அவர்களால் இடம் பிடிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.