மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது- கனிமொழி

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது- கனிமொழி

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தந்த ஆட்சி திமுக ஆட்சி, அதிமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை கேட்பதற்கும், நிறைவேற்றி தருவதற்கும் இயலாத நிலை இருந்தது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார்.

நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டி கடம்பூர் பேரூராட்சியில் கடந்த ஏப்.24-ஆம் தேதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் பயன்பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் சிறப்புரையாற்றினார். கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, இ-பட்டா என ரூ.44.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தொடர்ந்து, லிங்கம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் 49 பேருக்கு ரூ.3.57 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாகளை கனிமொழி எம்.பி. வழங்கி பேசுகையில் மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை வைத்து அழைக்க தொடங்கியது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனித்துறையை தொடங்கி முதல்வரின் நேரடிப்பார்வையில் வைத்து கொண்டார்.

கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றம்

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தந்த ஆட்சி திமுக ஆட்சி, அதிமுக ஆட்சி வந்த பின்னர் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை கேட்பதற்கும், நிறைவேற்றி தருவதற்கும் இயலாத நிலையை நீங்கள் பார்த்து இருப்பிர்கள். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வழியில் முதல்வரின் நேரடி பார்வையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை வைத்துக்கொண்டு, உங்களுக்கான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.

இன்றைக்கு நிகழ்ச்சி பட்டா மட்டும் வழங்கமால் எந்த இடம் என்பதனை அருகில் வைத்து தான் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். யாருக்கு எந்த இடம் என்பதனையும் ஒதுக்கீடு செய்துள்ளார்கள், பட்டா வழங்குவது மட்டுமின்றி, வீடுகள் கட்டிதருவதற்கும், தொழிற்கூடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எழுத்தாளர் கி.ரா-வின் ஊரில்…

முன்னதாக  சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் அவர் படித்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை ரூ.25 லட்சத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாலாட்டின்புதூரில் மாற்றுத்திறனாளி தங்கமாரியம்மாளுக்கு இலவச 3 சக்கர மின் வாகனத்தை வழங்கினார். பின்னர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கி.ராஜநாராயணன் மணிமண்டப கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.