ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது., நீதிமன்றம் அதிரடி உத்தரவு,.! 

ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது., நீதிமன்றம் அதிரடி உத்தரவு,.! 

ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்றம். 

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்ததும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கத்தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் என அனைவரும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்கள். இது பாஜக தரப்பை மிகவும் கோவப்படுத்தியது. ஒன்றிய அரசு என்று இனியும் அழைத்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது. 

இதைத் தொடர்ந்து முதலமைச்சர்கள்,அமைச்சர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசு என்று அழைக்கிறார்கள், அப்படி அழைக்க தடை விதிக்க வேண்டும்   என்று திண்டுக்கல்லை சேர்ந்த ராமசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  

அந்த மனுவில் "நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று தற்போது அரசு அமைத்துள்ளது. புதிய அரசாங்க பொறுப்பேற்ற பின்பு இந்திய அரசை "ஒன்றிய அரசு" என்று கூறிவருகிறது மேலும் இவ்வாறு அழைப்பதை ஊக்கப்படுத்துகிறது. 'ஒன்றியம் 'என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிரானது ஆகும். இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு பின்புலத்தில் ஏதோ தீவிரவாத சக்தியின் உந்துதல் இருப்பதாக சந்தேகம் எழுகிறது.

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தின்போது ஒன்றியம் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியபோது,  அதற்கு பதிலளித்த  முதலமைச்சர் "இந்தியா யூனியன் கவர்மெண்ட்" என்று அழைக்கப்படுவதால் அதை நாங்கள் ஒன்றிய அரசு என்று கூறுகின்றோம், இது ஒன்றும் சமூக விரோத குற்றமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இது முற்றிலும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது, சட்டமன்றத்தை இந்த அரசு தவறாக வழிநடத்தி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இதேபோல் சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் உரையின் இறுதியில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறவில்லை இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இறையாண்மைக்கு எதிரான கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தலைமை செயலரிடம் மனு அளித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே தமிழக அரசு "ஒன்றியம்"என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும் இந்திய அரசை இந்தியா அல்லது பாரதம் என்றே குறிப்பிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

அந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்த நிலையில், முதலமைச்சர்கள்,அமைச்சர்கள் எப்படி பேசவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடமுடியாது என்றும், அது அவர்களின் தனியுரிமை என்றும் கூறிய நீதிமன்றம் ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. அதோடு இந்திய அரசை இந்தியா அல்லது பாரத் என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை.