கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மதுபானம்,. தடுக்கச்சென்ற காவலர்களை சூழ்ந்து தாக்கிய பெண்கள்.! 

கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மதுபானம்,. தடுக்கச்சென்ற காவலர்களை சூழ்ந்து தாக்கிய பெண்கள்.! 

சென்னையில் கள்ளச் சந்தை மூலம் மதுபானம் விற்கச் சென்ற கும்பலை பிடிக்கச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை பட்டாளம் ஸ்ட்ரஹான்ஸ் சாலையில் சிற்றுண்டிக் கடை நடத்தி வருபவர் சரவண பெருமாள். இவர் நேற்றிரவு பணியை முடித்துவிட்டு மதுபானம் வாங்குவதற்காக ஓட்டேரி பிரிக்லின் சாலை சந்திப்பு அருகே சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மதுபானம் விற்பதாகக் கூறி சரவண பெருமாளிடம் இருந்து 500 ரூபாயைப் பெற்றுக்கொண்டு மதுபானம் வழங்காமல் அவரை ஏமாற்றிச் தப்பிச் சென்றுள்ளார். 

இதனைத் தொடர்ந்து அங்கு மதுபானம் விற்ற மற்றொரு நபரிடம் சரவண பெருமாள் 200 ரூபாய் கொடுத்து மதுபானம் வாங்கிக்கொண்டு திரும்பியபோது தன்னை ஏமாற்றி 500 ரூபாயை பெற்றுச் சென்ற அடையாளம் தெரியாத நபர் மீண்டும் அங்கு வரவே அவரை மடக்கி சரவண பெருமாள் தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது அந்த அடையாளம் தெரியாத நபர் பணத்தை திருப்பித் தராமல் சரவண பெருமாளை அடித்துத் துரத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக சரவண பெருமாள் அந்த பகுதியில் இரவு ரோந்துப் பணியில் இருந்த ஓட்டேரி உதவி ஆய்வாளர் சஜீபாவிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கள்ளச் சந்தை மூலம் மதுபானம் விற்பதை தடுத்து அவர்களை பிடிக்க எண்ணிய உதவி ஆய்வாளர் சஜிபா, மற்றொரு உதவி ஆய்வாளரான மணிவண்ணன் மற்றும் 2 காவலர்களை உடன் அழைத்துக்கொண்டு சரவண பெருமாளுடன் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். 


பின்னர் அவரிடம் மீண்டும் சென்று மதுபானம் வாங்குமாறு அறிவுறுத்திவிட்டு சரவண பெருமாளை பின் தொடர்ந்து தனியாகச் சென்று அவருக்கு மதுபானம் விற்பனை செய்துகொண்டிருந்த சேகர் (எ) மீசை சேகரை உதவி ஆய்வாளர் சஜிபா மடக்கி பிடித்தபோது அவரிடம் ஒரு மதுபான பாட்டில் மட்டுமே இருந்துள்ளது.

அதனை பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர் சஜிபா, சேகர் (எ) மீசை சேகரை அழைத்துக்கொண்டு எஸ்.எஸ் புரம் 'ஏ' பிளாக்கில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அங்கு மதுபானம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்துள்ளார். அப்போது திடீரென்று அங்கு ஆண்களும், பெண்களும் கூட்டமாக கூடி உதவி ஆய்வாளர் சஜிபாவை தாக்கத் துவங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் சஜிபா தன்னுடன் வந்த மற்றொரு உதவி ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவலர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இந்நிலையில் அந்த கும்பல் காவலர்கள் அனைவரையும் தாக்க முற்பட, தங்களை தற்காத்துக்கொள்ள காவலர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் ஆண்கள் பெண்கள் அடங்கிய அந்த கும்பல் நாலாப்புறமும் சிதறித் தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஜிபா மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக தலைமை செயலக காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் உதவி ஆய்வாளர் சஜிபாவை தாக்கிய காஞ்சனா, சசிகலா, பிரியங்கா, மணிகண்டன், செல்வி, நந்தினி, ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியிருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

பின்னர் தலைமைச் செயலக காலணி  காவல்துறை ஆய்வாளர் மலர் செல்வி தலைமையிலான காவல் துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கற்பகம், நந்தினி, செல்வி, காஞ்சனா, சசிகலா, மணிகண்டன் உட்பட 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க குற்றவாளியை பிடிக்கும் விசாரணைக்காக கைக் குழந்தையோடு ஒரு பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். காவல் துறையினரையே தாக்கும் அளவிற்கு வளர்ந்து விட்ட சமூக விரோதிகளின் அடாவடித்தனம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.