ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த கண்ணதாசன், மனித உரிமை அணையம், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் எனக் கூறியுள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் தொடந்து 8 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், நேற்றைய முன் தினம் அமலாக்கத்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து, ஓமந்தூரார் மருத்துவர்களின் அறிக்கை, அமலாக்கத்துறையினரின் உத்தரவின் பேரில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, மனித உரிமை ஆணையம் உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது, அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும் பொது தாக்கியதாகவும், தரையில் போட்டு தரதரவென இழுத்ததாகவும் செந்தில் பாலாஜி கூறியதாக, கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த தகவல்களின் அடிப்படையில், மனித உரிமை ஆணையம், நாளை அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.