15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா!

சிலருக்கு சுமார் 2 கிலோவில் இருந்து 5 கிலோ எடையுள்ள பெரிய மீன்கள் அதிகளவில் சிக்கியது.

15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா!

மணப்பாறை நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் போட்டி போட்டு மீன்களை பிடித்துச் சென்ற பொதுமக்கள்.

மீன்பிடி திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கள்ளிப்பட்டியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் கள்ளிகுளம் உள்ளது. அப்பகுதி மக்களின் பிரதான நீர் ஆதாரமாக விளங்கும் இக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது குளத்தில் நீர் முழுவதுமாக நிறைந்திருந்த நிலையில் அதில் அதிக அளவில் மீன்களும் துள்ளி விளையாடின.

மக்கள் உற்சாகமாக பங்கேற்பு

இந்நிலையில் தற்போது நீரின் அளவு குறைந்து விட்டதால் கிராம மக்கள் சார்பில் மீன்களை பிடித்துக் கொள்ளும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அதன்படி இன்று அதிகாலை ஊர் முக்கியஸ்தர்கள் விழாவை தொடங்கி வைக்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்பிடி வலைகளுடன் குளத்தில் இறங்கி மீன் பிடிக்கத் துவங்கினர்.

மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை

கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டுவகை மீன்கள் அனைவருக்கும் சிக்கியது. அனைவருக்கும் மீன்கள் சிக்கியதால் மீன்பிடி ஆர்வலர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதில் சிலருக்கு சுமார் 2 கிலோவில் இருந்து 5 கிலோ எடையுள்ள பெரிய மீன்கள் அதிகளவில் சிக்கியது. மீன்பிடி திருவிழாவில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த  நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.