அழகர் கோவிலில் தீ விபத்து!

அழகர் கோவிலில் தீ விபத்து!

மதுரை அழகர்கோவில் கள்ளழகர்கோவில் மடப்பள்ளி அருகே உள்ள அறைகளில் தீவிபத்து - சுவாமி படங்கள் புத்தகங்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான சில பொருட்கள் எரிந்து சேதம் - பழமையான கல் கட்டடிம் சேதமடைவதை தடுக்க தீயணைப்பு துறையினர் மூலமாக  தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

அழகர் கோவில்

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடி வாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில் நவராத்திரி விழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டும்,  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தனர்,இந்நிலையில் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள மடப்பள்ளியின் அருகேயுள்ள அறைகளில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் கோவிலுக்குள் இருந்த  பக்தர்கள் அவசர,அவசரமாக ,பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் வருவதற்குள் அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவ தொடங்கியது, 

பொருட்கள் சேதமடைந்தன

தீ விபத்து காரணமாக அறையில் உள்ள சுவாமி படங்கள், புத்தகங்கள், கோவிலுக்கு சொந்தமான சில ஆவணங்கள், மரப் பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன. கோவில் பணியாளர்கள் முதற்கட்டமாக தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றும் அணைக்க முடியாத நிலையில் தீ மளமள வென பரவ தொடங்கியது.அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது,அதனைத்தொடர்ந்து மேலூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீ மேலும் பரவாமல் தடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்த நிலையில் தனியார் லாரிகள் மூலம் நீர் கொண்டுவரப்பட்டும் தீ அணைக்கப்பட்டது.  

அமைச்சர்க் ஆய்வு

மேலும் பழமையான கற்களால் அமைக்கப்பட்ட கட்டிடம் என்பதால் கட்டிடம் இடிந்து சேதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கட்டிடத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். தொடர்ந்து சில இடங்களில் புகை வெளியேறிவருகிறது. இந்நிலையில் கோவிலில் தீப்பற்றி பகுதிகளில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மேலூர் வருவாய்  கோட்டாச்சியா் பிர்தெளஸ் பாத்திமா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். 

மின் கசிவா?

முதற்கட்டமாக மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவில்களில் தீ தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்ட நிலையிலும் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.