தென்னை மரங்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்... விவசாயிகள் கவலை!

தென்னை மரங்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்... விவசாயிகள் கவலை!

ராஜபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ரூ. 3 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்களையும், மின் கம்பங்களையும் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள நச்சாடைப் பேரி கண்மாய் பாசனத்தில் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. மா, தென்னை போன்றவை பிரதானமாக பயிரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக வனத்தில் இருந்து விவசாய பகுதிக்கு வரும் ஒற்றை காட்டு யானை தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வரட்டோடை, பங்களா காடு, உடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானை வேருடன் சாய்த்து சேதப்படுத்தி உள்ளது.

இதில் ஒரு மரம் மின்கம்பியில் விழுந்ததால் அங்கிருந்த 2 மின் கம்பங்களும் உடைந்து சேதமாகி விட்டது. இது குறித்து மின்வாரிய துறையினருக்கு விவசாயிகள் தகவல் அளித்ததும், அவர்கள் வந்து உடனடியாக அந்த வழியாக மின்சாரத்தை துண்டித்து விட்டனர்.

ஆனால் புகார் அளித்து 2 நாட்களாகியும் வனத்துறையினர் இது வரை பார்வையிடக் கூட வரவில்லை எனவும் விவசாயிகள் ஆதங்கம் தெரிவிதுள்ளனர். கீழே விழுந்த மின்கம்பம் யானை மீது விழுந்து அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக விவசாயிகளை கைது செய்வதில் முனைப்பு காட்டும் வனத்துறையினர், மரங்களின் பாதிப்பு குறித்து கண்டு கொள்வதில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக பராமரித்து வந்த மரங்கள் பலன் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில், யானையால் சேதமடைந்ததால் தங்களுக்கு ரூ. 3 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இரவில் காவலுக்கு வரும் பட்சத்தில் யானை விரட்டுவதால் உயிருக்கு பயந்து வருவதில்லை எனவும் அச்சம் தெரிவித்துள்ள விவசாயிகள்,

சேதமான மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசும், வனப்பகுதியை சுற்றி அகழி வெட்டி வன விலங்குகள் விவசாய பகுதிக்குள் வருவதை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.