உழவர் சந்தை உலக சந்தையாக மாற்றப்படும் - அமைச்சர் உறுதி!

உழவர் சந்தையை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்வதே வேளாண் துறையின் இலக்காக இருக்குமென என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

உழவர் சந்தை உலக சந்தையாக மாற்றப்படும் - அமைச்சர் உறுதி!

வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தலைமையில் வணிக அமைப்புகள் உடனான ஆலோசனைக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து ஏற்றுமதியாளர்களுடனான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனவும் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியவில்லை என்பதற்கு தானும் ஒரு சான்று எனவும் தெரிவித்தார்.

மேலும், தான் ஒரு விவசாயியாக இருந்தும் அதிக லாபம் ஈட்ட முடியவில்லை என வருத்தம் தெரிவித்த அவர், உற்பத்தி செய்வதைவிட அதனை சந்தைபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் விவசாய நிலங்களை பிளாட்டுகள் போட்டு விற்பதை தடுக்க, வேளாண்மையை அதிகரித்து அதிக லாபம் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

மேலும், பனை மரங்கள் வளர்த்தலை ஊக்கப்படுத்தி நீரா பானம், கருப்பட்டி வெல்லம் தயாரிப்பது போன்றவற்றை ஊக்கப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தமிழகத்தில் உள்ள 194 குளிர்பதன கிடங்குகளை மக்களுக்கு பயன்படும் வகையில் துரிதபடுத்தப்படுத்தப்பட்டு, தேவைப்படும் இடங்களில் கூடுதல் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உழவர் சந்தையை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்வதே வேளாண் துறையின் இலக்காக இருக்கும் எனக் கூறினார்.