இனி மின்சாரத்துறை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தாலே போதும்.! டிஜிபி  உத்தரவு.! 

இனி மின்சாரத்துறை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தாலே போதும்.! டிஜிபி  உத்தரவு.! 
Published on
Updated on
1 min read

மின்சாரத்துறை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தவுடன் அவர்களை தடுக்காமல் பணிக்கு அனுப்ப வேண்டும் என அனைத்து எஸ்.பி மற்றும் காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வில்லாத முழு ஊரடங்கானது அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளான மாநகராட்சி, சுகாதாரதுறை, மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள் என அந்த துறையை சேர்ந்த பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளனர்.

பணிகளுக்கு செல்லும் போது போலீசார் தடுத்து நிறுத்தினால் அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது என டிஜிபி தெரிவித்திருந்தார். இந்நிலையில்  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் பணிக்கு செல்லும் போது போலீசார் தடுத்து நிறுத்தப்பட்டு அடையாள அட்டையை காண்பித்தால் கூட அனுப்பாமல் வாகனங்களை பறிமுதல் செய்ய போவதாக மிரட்டி வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக அந்த துறையை சேர்ந்த ஊழியர்கள் பலர் டிஜிபிக்கு கோரிக்கை  வைத்தனர்.

எனவே அனைத்து காவல் ஆணையர் மற்றும் எஸ்.பிக்களுக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அத்தியாவசிய தேவைகளின் கீழ் வரக்கூடிய துறை. இது குறித்து அரசாணையிலும் வெளியிடபட்டுள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்று பரவி வரும் சூழலில் மருத்துவமனையில் மின்சாரம் சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களுக்கு அவசர கால சேவைகளை நிவர்த்தி செய்வதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சேவைகள் தேவை.எனவே அந்த துறையை சேர்ந்த ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்தவுடன் உடனே பணிக்கு அனுப்ப வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதை அனைத்து உயர் அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com