அதிமுக தலைமையகத்திற்கு செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுக தலைமையகத்திற்கு செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுக பொதுக்குழுவால் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் தலைமையகத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒற்றைத் தலைமை

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மோதல் நடைபெற்றது. அதிமுகவின் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளாராக முடிவெடுத்தார்.

ஆனால் இதற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அதிமுக இரு அணிகளாக செயல்பட ஆரம்பித்தது.

அதிமுக பொதுக்குழு

கடந்த ஜூலை 11 அன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளன்று அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அப்போது பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

தலைமையகத்திற்கு சீல் வைப்பு

அதிமுகவின் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையினரால் அதிமுக தலைமையகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்குச் சென்றனர்.

நீதிமன்ற உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு சாவியை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் வழங்கக் கோரி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து சீல் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நாளை கட்சி அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அலுவலகம் சென்று மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்க உள்ளதாகவும், இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.