'பேனா நினைவு சின்னம்' அமைக்க திமுக அவசரம்...!   சி.எம்.டி.ஏ. அனுமதி பெற ஏற்பாடுகள்...!

'பேனா நினைவு சின்னம்' அமைக்க திமுக அவசரம்...!   சி.எம்.டி.ஏ. அனுமதி பெற ஏற்பாடுகள்...!

மறைந்த முன்னாள் முதலமைச்சரும்,  தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் அமையவிருக்கும்  இந்த நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படும் என திட்டம். இவ்வாறிருக்க, நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட பேனா வடிவ சிலை ஒன்றை 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) அமைக்க திட்டமிட்டு அதற்கான மதிப்பீடுகளும் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னம் அமையவிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கருணாநிதி நினைவிடத்ததிலிருந்து  மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் இது அமையவிருக்கிறது. மீன்பிடி படகுகளின் இயக்கத்தை எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் இந்த பாலம் வடிவமைக்கப்படுவதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு "முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம்" என்று பெயரிட திட்டமிடப்பட்டுள்ளது. 
இதன் அடுத்த கட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை கடிதம் அனுப்பி இருந்தது.  தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவு சின்னத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு மற்றும்  கடலோர ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் விரிவாக கடிதம் அனுப்பியது. அதில் பேனா நினைவு சின்னத்தின் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு விரைவில் அனுமதி வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரை படத்தை சமர்ப்பித்து அனுமதி வாங்குவதற்கு அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.