திமுகவினர் செய்த தவறை தட்டிக்கேட்ட திமுகக்காரரை, திமுகவினரே கூட்டு சேர்ந்து தாக்கிய கொடுமை.! 

திமுகவினர் செய்த தவறை தட்டிக்கேட்ட திமுகக்காரரை, திமுகவினரே கூட்டு சேர்ந்து தாக்கிய கொடுமை.! 

ரேஷன் பொருட்கள் கொடுப்பதை தடுத்த தி.மு.க-வினரை தட்டிக்கேட்ட தி.மு.க நிர்வாகி மீது தி.மு.க நிர்வாகிகளே கூட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துரைப்பாக்கம் கந்தன்சாவடி-யைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(46) இவர் தி.மு.க சென்னை தெற்கு மாவட்ட துணை செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் இன்று காலை சட்டக் கல்லூரிக்கு அருகிலுள்ள ரேஷன் கடையில் அரசு அறிவித்த ரேஷன் பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் பணம் ஆகியவற்றை வாங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அவருக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெங்கடேஷிடம், தனது தாய் இறந்துவிட்டதாகவும், பல அவசர தேவைகள் இருப்பதால் தங்கள் டோக்கன் மூலம் இன்று நான் ரேஷன் பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். 

அதற்கு வெங்கடேஷ் சம்மதம் தெரிவிக்கவே ஆட்டோ ஓட்டுநர் ரேஷன் பொருட்களை வாங்கச் சென்றார். அப்போது அங்கிருந்த தி.மு.க-வினர் சிலர் அவரை தடுத்து நிறுத்தி, இன்று உனக்கு பொருட்களோ பணமோ கிடையாது எனக்கூறி அடித்து ரேஷன் கடையை விட்டு வெளியே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட வெங்கடேஷ் ஆட்டோ ஓட்டுநரை அடித்த தி.மு.க-வினரிடம் கட்சி சார்பில் ரேஷன் பொருட்கள் வழங்கவோ, தடுக்கவோ கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி தட்டிக் கேட்டுள்ளார்.  

இதனையடுத்து அங்கிருந்த தி.மு.க-வினர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தி.மு.க-வின் வட்டச் செயலாளர் வெங்கடேசன் தி.மு.க-வினரை தட்டிக் கேட்டுக் கொண்டிருந்த வெங்கடேஷை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் ஆபாசமாக திட்டியதோடு, அவரை ஆறுமுகம், குமார், பிரபு, கதிரவன் உட்பட 6 தி.மு.க நபர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து கழுத்து, கை போன்ற இடங்களில் அடிபட்ட காயங்களுடன் வெங்கடேஷ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக்கொண்டார். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் காவல் துறையினரிடம் வெங்கடேஷ் தி.மு.க வட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட 7 பேர் மீது புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க நிர்வாகியை தி.மு.க-வினரே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.