சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்...

தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே  சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்...

சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காரணத்தால், திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்காரணத்தைக்கொண்டும் அளித்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க மாட்டோம் என உறுதிபட தெரிவித்தார். மேலும், பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், அது சரிசெய்யப்பட்டவுடன் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இலவச செல்போன், பண்ணை மகளிர் குழுக்கள் அமைப்போம் என சொன்னீர்களே அமைத்தீர்களா? எனவும், அனைத்து இடங்களிலும் வைஃபை வசதி அமைத்தீர்களா? எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிலமில்லாத எத்தனை பேருக்கு நிலம் வழங்கினீர்கள்? எனவும், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், தற்போது ஏழ்மையான குடும்பத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என சொல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஏழ்மையானவர்களுக்கு மட்டுமின்றி, தகுதியுடைய அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும், அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் எனவும் விளக்கமளித்தார்.