ஐ.ஐ.டியில் தொடரும் மரணங்கள்..தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை.! 

ஐ.ஐ.டியில் தொடரும் மரணங்கள்..தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை.! 

சென்னை ஐ. ஐ.டியில்  நடைபெறும் சம்பவங்கள் குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது. 

சென்னை ஐ. ஐ.டியில் கேரளாவைச் சேர்ந்த கௌரவ விரிவுரையாளர் உன்னிகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் எரிந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் சாதி மற்றும் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அதனால் அவர் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தீ வைத்து எரித்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் சென்னை ஐ. ஐ.டியில் நடைபெறும் தொடர் நிகழ்வுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமார், அனைத்து மக்களின் வரிப்பணத்தைத்  தான் மத்திய அரசு பகிர்ந்து அளித்து வருகிறது என்ற அவர், ஐ. ஐ.டியில் மட்டும் தான் இட ஒதுக்கீடு இல்லை என்றும், ஐ. ஐ.டி யில் தொடர்ச்சியாக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் கூறினார். 

மேலும் ஐ. ஐ.டி யில் குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக குற்றம்சாட்டிய அவர்,தமிழக அரசு தனி விசாரணை ஆணையம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தினார். அதோடு ஐ. ஐ.டியில் சாதிய பாகுபாடுகள் அதிகமாக இருக்கிறது என மாணவர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.