கோவையில் விநாயகர் ஊர்வலம்… பலத்த பாதுகாப்பு!

கோவையில் விநாயகர் ஊர்வலம்… பலத்த பாதுகாப்பு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படவுள்ளது.

விநாயகர் ஊர்வலம்

கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரத் சேனா, அனுமன் சேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 530 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஏற்கனவே 283 சிலைகள் நேற்று முன் தினம் மற்றும் அதற்கு முந்தைய நாளில் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

இந்நிலையில் மீதமுள்ள 254 சிலைகள்  இன்று கரைக்கப்பட உள்ளன.இதற்காக போத்தனூர்,குனியமுத்தூர்,சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்ட சூழலில் இன்று உக்கடம்,டவுன்ஹால்,வடகோவை,சாய்பாபா காலனி,சிவானந்தா காலனி, ரத்தினபுரி, ஆர்.எஸ்.புரம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்த சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட உள்ளது.

போக்குவரத்து மாற்றம்

இதையடுத்து கோவை மாநகர பகுதிகளில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையிலிருந்து மாநகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் உக்கடம் முதல் சுங்கம்  பை-பாஸ் சாலை மற்றும் பேரூர் பைபாஸ் சாலை வழியாக காந்திபுரம் அடையும் வகையில் திருப்பி விடப்பட்டுள்ளது.மேலும்  மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து காந்திபுரம் வரும் வாகனங்கள் அனைத்தும் சங்கனூர் பாலம் வழியாக கணபதியை அடைந்து சத்தி சாலை வழியாக காந்திபுரம் செல்லும் வகையிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு

இதேபோல் ஆர்.எஸ்.புரம், தடாகம் சாலை, ராஜ வீதி, வைசியாள் வீதி வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் ஊர்வலம் செல்வதையொட்டி இரவு எட்டு மணி வரை கனரக வாகனங்கள் செல்ல காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். முத்தண்ணன் குளத்தில் இரவு வழக்கமாக இரவு 10 வரை சிலைகள் கரைக்கப்படும் என்பதால் அப்பகுதியில் காவல்துறையினர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். கோவை மாநகரம் முழுவதும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 1500 போலீசாரும் மத்திய அதிரடிப்படையினர் இரண்டு கம்பெனியும் மற்றும் ஊர்க் காவல் படையினரும் என இரண்டாயிரம் பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.