பாஜக சுவரெழுத்துகள் தார் பூசி அழிப்பு!

பாஜக சுவரெழுத்துகள் தார் பூசி அழிப்பு!

ஓமலூரில் பாஜக ஓபிசி அணி மாநில மாநாட்டிற்கு வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை தார் பூசி அழிக்கப்பட்டுள்ளது. பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, மாநில தலைவர் அண்ணாமலை பெயர்களில் தர்ப்பூசி இருப்பது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக மாநாடு

 சேலம் மாவட்டம் ஓமலூரில் வரும் 21-ம் தேதி பாஜக பிற்பட்டோர் பிரிவின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய மாநில தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தநிலையில், மாநாட்டிற்கு வரும் தலைவர்களை வரவேற்க்கும் வகையில் ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள், சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.  ஓமலூரில் உள்ள சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் சுவரில் மிகப்பெரிய அளவில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டு இருந்தது. இந்தநிலையில், மாநாட்டு திடலில் வைத்திருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து எடுத்து சென்றுள்ளனர்.

 சுவரெழுத்துகள் அழிப்பு

 தொடர்ந்து பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி, தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் பெயர்களும் சுவர் விளம்பரத்தில் எழுதப்பட்டிருந்தது.  இந்த சுவர் விளம்பரங்களை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் தார் பூசி அழித்துள்ளனர். குறிப்பாக பாஜக பெயர், பிரதமர் மோடியின் பெயர் முழுமையாக தார் பூசப்பட்டுள்ளது. இதையறிந்த பாரதிய ஜனதா ஓபிசி அணியின் நிர்வாகிகள், மாநில செயலாளர் தங்கராஜ் தலைமையில் திரண்டனர். இதையடுத்து சுவர் விளம்பரங்களை அழித்தவர்கள் மீதும், பேனர்களை கிழித்தவர்கள் மீதும் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தார் பூசியவர்களை கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி பிரிவு மாநில செயலாளர் தங்கராஜ் கூறும்பொழுது, ஓமலூரில் பாரதிய ஜனதா ஓபிசி அணி மாநில மாநாடு நடைபெறக்கூடாது என திமுகவினர் செயல்படுவதாகவும், நேற்று மதுரையில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று ஓமலூரில் சுவர் விளம்பரங்களை அழித்து, மாநாடு நடைபெறுவதை தடுக்க பல்வேறு வழிகளை கையாண்டு வருவதாகவும் கூறினர்.

 மேலும், எந்த மிரட்டலுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் உறுதியாக மாநாடு நடைபெறும். இதில், மாநில தலைவர் உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறினார். தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து தார் பூசி அழித்தவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினார்.

நேற்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்கு எதிர்வினையாகவும் இது நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.