கேரளாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்... ஆண்டிப்பட்டியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்...

கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் அதிகரிப்பால் ஆண்டிப்பட்டி நகரில் வீடு வீடாக சென்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள 30 மஸ்தூர் பணியாளர்கள் நியமனம்.

கேரளாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்... ஆண்டிப்பட்டியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்...
கேரளா மாநிலத்தில் ஜிகா வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கேரளமாநிலத்தை ஒட்டியுள்ள தேனி மாவட்த்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 
அதன்படி தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகரில் ஜிகா ரைவஸ், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பரவலை ஏற்படுத்தும், ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டிப்பட்டி நகரில் 30 மஸ்தூர் பணியாளர்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த பணியாளர்கள் 5 குழுக்களாக பிரிந்து ஆண்டிப்பட்டி நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். வீடுகளில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்படுகிறதா? அந்த தண்ணீரில் ஏடிஸ் கொசுப்புழுக்கள் இருக்கிறதா? என்று ஆய்வு நடத்தப்படுகிறது.
 
மேலும் பாதுகாப்பற்ற தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் இருந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு தண்ணீரில் உள்ள புழுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர தற்போது மழை பெய்து வருவதால், வீட்டினை சுற்றி தேவையறற் பொருட்களில் மழை நீர் தேங்கி அதன்மூலம் கொசுக்கள் உருவாகுவதை தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து பகுதிகளிலும் கொசுமருந்து புகை அடிக்கப்பட்டு வருகிறது.