இளைஞர்களே இந்தியாவின் முதுகெலும்பு.. இளைஞர் சக்தியை உருவாக்க கல்வி அவசியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இளைஞர்களே இந்தியாவின் முதுகெலும்பு எனவும், இளைஞர் சக்தியை உருவாக்க கல்வி அவசியம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களே இந்தியாவின் முதுகெலும்பு.. இளைஞர் சக்தியை உருவாக்க கல்வி அவசியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக, அரசுத் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, சென்னை ராணி மேரி கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

இதனை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிக்கான சேர்க்கைச் சான்றிதழ்களையும், திறன் குறித்த ஆலோசனைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வுக் கூடங்களையும் பார்வையிட்டார்.

முன்னதாக மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் விற்பனை அரங்குகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 608 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்காக காய்கறி பழ வியாபாரம், மளிகைக்கடை, சிறு பெட்டிக்கடை, தையல் நிலையம் போன்ற தொழில்களை நடத்துவதற்கு 25 புள்ளி 66 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகளை வழங்கினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர், ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு ஜெயலலிதா ஆட்சியில் நடத்தப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறை சென்றதை மறக்க முடியாது எனக் கூறினார்.

இளைஞர்கள் தான் நாட்டின் முதுகெலும்பாக விளங்கி கொண்டிருப்பதாகவும், இளைஞர் சக்தியை உருவாக்க கல்வி அவசியம் எனவும் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உழைப்பின் சக்கரத்தை சரியாக உருவாக்கும் அரசே தமிழ்நாடு அரசு எனவும் பெருமிதம் தெரிவித்தார்.