செல்போன் கடைகளில் கைவரிசையை காட்டிய இளைஞர்கள்...!

செல்போன் கடைகளில் கைவரிசையை காட்டிய இளைஞர்கள்...!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் மகன் கிஷோர் (23). இவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் மொபைல் சர்வீஸ் மற்றும் விற்பனை கடை வைத்துள்ளார். இதே காம்ப்ளக்சில், கருவடிக்குப்பத்தை சேர்ந்த சக்திவேல் (40) என்பவர் மெடிக்கல் கடை வைத்துள்ளார். கடந்த 20ம் தேதி நள்ளிரவு, இருகடைகளின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த 37 மொபைல் போன்கள், 4 ஸ்மார்ட்வாட்ச், ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் எலக்ரானிக் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து, மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், கோட்டக்குப்பம் டிஎஸ்பி மித்ரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்இன்ஸ்பெக்டர் வசந்த் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். முதற்கட்டமாக சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, விசாரணை மேற்கொண்டனர். அதில், இரண்டு நபர்கள், கடையின் பூட்டை உடைத்து திருடிக்கொண்டு, நாவற்குளம் வழியாக புதுச்சேரிக்கு சென்றது தெரியவந்தது. 

அதன் அடிப்படையில், புதுச்சேரி குறிஞ்சி நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்த பன்னீர் மகன் கண்ணப்பன் (21), லாஸ்பேட்டை அன்னை பிரியதர்ஷினி நகரை சேர்ந்த சேகர் மகன் விஜயக்குமார் (21), ஜீவானந்தபுரம் திருப்பூர் குமரன் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் வெடிமுத்து (எ) ஆகாஷ் (22) ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் கடந்த 20ம் தேதி நள்ளிரவு அந்த கடைக்கு அருகில் இருந்த கிஷோர், சக்திவேல் ஆகியோரின் கடைகளை உடைத்து, மொபைல்போன், ரொக்கப்பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

மேலும், அவர்கள், புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை, டி.நகர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல கடைகளின் பூட்டை உடைத்து பல்வேறு பொருட்கள் திருடியதும் தெரியவந்துள்ளது. அதன்பேரில், மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 37 மொபைல்போன், ஸ்மார்ட்வாட்ச், ரூ.30 ஆயிரம் பணம், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.