இன்ஜினியரிங் கல்லூரிகளில் இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்... செப்டம்பர் 7 முதல், அக்.4 வரை கலந்தாய்வு...

பி.இ., பி.டெக்., போன்ற பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் கல்லூரிகளில் இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்... செப்டம்பர் 7 முதல், அக்.4 வரை கலந்தாய்வு...
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம், பிளஸ்1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்களை கணக்கில் கொண்டு பிளஸ்2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் பி.இ., பி.டெக்., போன்ற பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org என்ற இணையதளத்தில் இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4ம் தேதியும் வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 7ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.