தஞ்சாவூர் வாலிபரை திருப்பி அனுப்பிய ஏமன்... சென்னை விமான நிலையத்தில் கைது...

தடைசெய்யப்பட்ட  ஏமன் நாட்டிற்கு சென்ற தஞ்சாவூரை சோ்ந்த வாலிபரை அந்நாட்டு அரசு பிடித்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது.

தஞ்சாவூர் வாலிபரை திருப்பி அனுப்பிய ஏமன்... சென்னை விமான நிலையத்தில் கைது...

தஞ்சாவூரை சோ்ந்தவா் குமரவேல் (31). கட்டடத் தொழிலாளியான இவா் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்திற்கு சென்றாா்.அங்கு கட்டிடத்தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

குமாரவேலுக்கான விசா காலம் முடிந்த பின்பும்,இவா் இந்தியாவிற்கு திரும்பி வராமல், சவுதி அரேபியாவிலேயே சட்டவிரோதமாக  தங்கியிருந்து  வேலை செய்து உள்ளார்.

இந்நிலையில் குமாரவேலுக்கு தற்போது சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.ஆனால் காலாவதியான விசாவுடன் திரும்பி வரமுடியாத நிலையில் அந்த நாட்டு விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கண்டுப்பிடித்து கைது செய்து சிறை தண்டனை உட்பட கடுமையான தண்டையை அளிப்பாா்கள் என்று பயந்தாா்.

இந்நிலையில் அருகே உள்ள ஏமன் நாட்டிற்கு சென்றுவிட்டால், அங்கிருந்து போலி விசா போன்ற ஆவணங்களை பணம் கொடுத்து வாங்கி,சாா்ஜா வழியாக இந்தியாவிற்கு சென்றுவிடலாம் என்று நண்பா்கள் சிலா் கூறினா்.ஏமன் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட நாடு,என்பது தெரிந்தும் குமாரவேல்,15 நாட்களுக்கு முன்பு ஏமனுக்கு சென்றுவிட்டாா்.

ஏமனில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, சில ஏஜெண்ட்கள் மூலம் போலி விசா வாங்க ஏற்பாடு செய்தாா். இதற்கிடையே ஏமன் நாட்டு குடியுரிமை அதிகாரிகளுக்கு, குமாரவேல் பற்றிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்நாட்டு குடியுறிமை அதிகாரிகள் குமாரவேலை கைது செய்து முகாமில் வைத்தனா். அதன்பின்பு அவரை இந்தியாவிற்கு  திருப்பி அனுப்ப முடிவு செய்தனா்.

அதன்படி குடியுரிமை அதிகாரிகள் குமாரவேலை சாா்ஜா வழியாக ஏா் அரேபியா விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனா். அதோடு சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து விட்டனா்.

இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள், இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக   தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற குற்றத்திற்காக கைது செய்தனா். குமாரவேலிடம் பல மணி நேரம் விசாரித்தனா் அதோடு மத்திய உளவுத் துறையினரும் விசாரணை நடத்தினா் குமாரவேலின் செல்போன் பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்தனா். மேலும் குமாரவேல் ஏமனில் எங்கு தங்கியிருந்தாா்? இந்திய அரசின் தடையை மீறி,ஏமன் நாட்டிற்கு சென்றது ஏன்? என்றும் விசாரணை நடந்தது. 

அதன்பின்பு  சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா். சென்னை விமான நிலைய போலீசாரும் பாஸ்போா்ட்டை தவறாக பயன்படுத்துதல், அரசால் தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சட்ட விரோதமாக சென்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.