12-ம் வகுப்பு வினா தாள் முறை மாற்றமா? மகேஷ் பொய்யாமொழி விளக்கம்  

12ம் வகுப்பு பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், வினா தாள் முறையை மாற்றுவது குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.  

12-ம் வகுப்பு வினா தாள் முறை மாற்றமா? மகேஷ் பொய்யாமொழி விளக்கம்   

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஹோபர்ட் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், எழிலன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். மேலும் பள்ளியில் மர கன்றை நட்டும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சுமார் 2 வருடங்களுக்கு பிறகாக பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு உள்ளது என்றும், மாணவர்களிடம் தானே நேரிடையாக கேட்ட போது, பள்ளிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஹோபார்ட் பள்ளிகள் போன்று1 வரலாற்று சிறப்புமிக்க பள்ளிகள் நிறையாவே உள்ளது என்ற அவர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு வாரத்திற்கு பள்ளிக்கு மாணவர்கள் வருகையை கண்காணித்து, அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளிகள் மூடி இருந்தாலும், மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் மாணவர்களுக்கு அரசு கல்வியை அளித்து தான் வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் 12ம் வகுப்பு பாடங்கள் குறைக்கப்பட்டாலும், வினா தாள் முறையை மாற்றுவது குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று அமைச்சர் கூறினார். அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில்,  மாற்று சான்றிதழ் வழங்குவதற்கு கட்டணத்தை காரணம் காட்ட கூடாது என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது என்றும், அதுபோன்று புகார் வந்தால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.