வேளாண் பட்ஜெட்2023: விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்படுமா?!

வேளாண் பட்ஜெட்2023:  விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்படுமா?!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று காலை 10 மணிமுதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.   இந்த வேளாண் பட்ஜெட்டானது  திமுக அரசால் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டாகும்.  சிலப்பதிகாரத்தின் ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ பாடலை மேற்கோள் காட்டி வேளாண்மையின் மகத்துவத்தை எடுத்துக் கூறி வருகிறார் அமைச்சர்.

நுண்ணீர் பாசனம்:

நுண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 53400 ஹெக்டேர் அளவிலான நுண்ணீர் பாசன முறையினை நிறுவுவதற்கு மானியமாக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பழச்செடி தொகுப்பு: 

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுவதோடு ஒவ்வொரு கிராமங்களிலும் தலா 300 குடும்பங்களுக்கு மா, பலா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச்செடி தொகுப்பு விநியோகிக்க ரூ.15 கோடி ஒதுக்கப்படவுள்ளது.

பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறை:

பசுமைக் குடில், நிழல் வலைக் குடில் அமைத்து உயர்மதிப்புள்ள காய்கறிகள், பூக்கள் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படுவதே பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையாகும்.  இத்தகைய பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையைப் பரவலாக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தக்காளி, வெங்காயம் :

தக்காளி ஆண்டு முழுவதும் ஒரே சீராக கிடைக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  அதை போலவே வெங்காயம் ஆண்டு முழுவதும் ஒரே சீராக கிடைக்க ரூ. 29 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

குளிர்கால காய்கறிகள்:

1000 ஹெக்டேரில் செளசெள, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக இந்த ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பயிற்சி: 

வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு தமிழ்நாட்டில் பின்பற்றும் வகையில் விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  வேளாண் பட்ஜெட்2023: மல்லிகை இயக்கத்துடன் அறிவிக்கப்பட்ட பல முக்கிய இயக்கங்கள்...!!