கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறிக்கும் காட்டு யானைகள் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!

கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறிக்கும் காட்டு யானைகள் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவை தேடி சாலையை கடப்பதும், சாலையோரம் நின்று தங்களது பசியை ஆற்றிக்கொள்வதும் வாடிக்கையாகி வருகின்றன. 

இயற்கையோடு சாலையோரம் இருக்கும் வனவிலங்குகளை ரசித்து செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது இவைகளுக்கு அஞ்சிதான் நடக்க வேண்டிருக்கிறது. அந்தவகையில், தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்கள் சாலையை வழிமறித்து நிற்கும் யானைகளுக்கு அஞ்சி கரும்பு துண்டுகளை வீசி செல்கின்றனர். 

கரும்பு துண்டுகளை ருசித்து அதற்கு அடிமையாகிய யானைகள் கூட்டம் கூட்டமாக ஆசனூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களாக  முகாமிட்டு வருகின்றன. இந்த நிலையில், குட்டிகளுடன் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் சாலையில் வரும் லாரிகளை வழிமறித்து  கரும்பு துண்டுகளை சுவைத்தும்,  சில யானைகள் சிறிது நேரம் கழித்து சாப்பிட கரும்பு கட்டுகளை தூக்கி செல்லும் சுவாரசிய நிகழ்வும் அரங்கேரி வருகிறது. 

ஆனால் இவைகளுடன் வெளியேறும் சில காட்டுயானைகள் அவ்வழியே செல்லும் வாகனங்களை வழிமறித்து தாக்கும் அபாய நிலைமையயும் ஏற்படுகிறது. மேலும் சமீபத்தில் அவ்வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்றை சூழ்ந்த யானைகள் அந்த காரை ஆக்ரோஷமாக தாக்கும் வீடியோ கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

கரும்பு உள்ளிட்ட தின்பண்டங்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. ஆனால் தன் உயிருக்கு அஞ்சி கரும்பு துண்டுகளை வீசி செல்லும் லாரி ஓட்டுநர்கள் பின்னால் வரும்  பிற வாகன ஓட்டிகள் சந்திக்கும் அபாய சூழலை உணர்வார்களா?...மாலைமுரசு செய்திகளுக்காக சத்தியமங்கலத்திலிருந்து செய்தியாளர் ஜெய்குமார்....