கொரோனா சூழலில் டாஸ்மாக் கடைகளை திறந்தது ஏன்? சட்டப்பேரவையில் நடந்த காரசார விவாதம்...
கொரோனா தொற்று இருக்கும் சூழலில் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டது, யார் ஆட்சியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

கடந்த ஆட்சியில் கொரோனா குறைவாக இருந்த போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு போராட்டம் நடத்திய தற்போதைய முதலமைச்சர், கொரோனா சூழலில் டாஸ்மாக் கடைகளை திறந்தது ஏன் என வினவினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்றும் , கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகவும், விளக்கம் அளித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆட்சியில் கொரோனா தொற்று குறைவாக இருந்த காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதாக தெரிவித்தார். கடந்த ஜுன் மாதம் கொரோனா பாதிப்பு 7000ஆக இருந்ததாகவும் , இன்று பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.
சுப்பிரமணியன், கடந்த மே மாதம் 7ம் தேதி 26 ஆயிரமாக இருந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை, இந்த அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது 7 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் மீண்டும் குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்ததாக குறிப்பிட்டார். இவ்வாறு விவாதம் தொடர்ந்த நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு அதற்கு முற்றுபுள்ளி வைத்தார்.