அ.தி.மு.க. சார்பில் பேச ஓ.பி.எஸ். யார்? ஈபிஎஸ் ஆவேச கேள்வி!
அ.தி.மு.க. சார்பில் பேச ஓ.பி.எஸ். யார்? என எடப்பாடி பழனிச்சாமி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப் பேரவையில் இரண்டாவது முறையாக இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தொரிவித்து பேசினர். அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தளவாய் சுந்தரம் பேசி அமர்ந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அ.தி.மு.க. சார்பில் வரவேற்பதாக கூறினார்.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர் எப்படி அ.தி.மு.க.வை பற்றி பேச முடியும் என்று கூறி முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, ஓ.பி.எஸ்.சை பேச அனுமதித்தது ஏன் என்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக, எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஈ.பி.எஸ். கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, ஓ.பி.எஸ். அ.தி.மு.க. சார்பில் பேச அழைக்கவில்லை என்றும், மூத்த உறுப்பினர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் பேச அழைத்தேன் என்றும் விளக்கம் அளித்தார். இருப்பினும், சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த அ.தி.மு.க.வினர் வெளி நடப்பு செய்தனர்.