வடசென்னையில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முன்னுரிமை யாருக்கு ?

வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூரில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்கப்படவுள்ளது. 

வடசென்னையில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளியில்  முன்னுரிமை யாருக்கு ?

முன்னுரிமை

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 1245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 45 பள்ளிகளில் சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளிகளில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதர பிரிவினரின் குழந்தைகளும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். 
குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுவதால் பெரும்பாலான மக்கள் தங்கள் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்க விருப்பப்படுகின்றனர்.
சென்னையை பொறுத்தவரை சென்னை தீவுத்திடல் பல்லவன் இல்லம், அண்ணா நகர், ஐ.ஐ.டி.வளாகம், சி.எல்.ஆர்.ஐ வளாகம், கில் நகர், மீனம்பாக்கம், அஷோக் நகர், தாம்பரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.வடசென்னை பகுதி மக்கள் வசதிக்காக வடசென்னை பகுதியில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

நிலம் ஒதுக்கீடு

இது தொடர்பாக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக வடசென்னை பகுதியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 
இதற்காக திருவொற்றியூரில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டிலேயே வகுப்புகள் துவங்க ஏதுவாக சென்னை மாநகராட்சியிடம் தற்காலிக கட்டிடம் கேட்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | எஸ்.கே 500 பேருக்கு சமபந்தி பிரியாணி விருந்து!! காரணம் தெரியனுமா?

ஆங்கிலம் மற்றும் இந்தி

திருவொற்றியூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமையும்பட்சத்தில் திருவொற்றியூர், மணலி, எண்ணூர், தண்டையார்ப்பேட்டை, போன்ற பகுதி மக்கள் மிகவும் பயனடைவர். 
இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளதும், தமிழ்நாட்டில் அரியலூர், ஈரோடு,  கள்ளக்குறிச்சி,  கரூர், கிருஷ்ணகிரி,  நாகப்பட்டினம், நாமக்கல்,  புதுக்கோட்டை,  சேலம், தூத்துக்குடி, தேனி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.