மழை பாதிப்புகளை முறையாக கையாண்டது யார்? - திமுக - அதிமுக இடையே காரசார விவாதம்!!

சென்னையில் மழை பாதிப்புகளை முறையாக எதிர்கொண்டது யார் ஆட்சியில் என திமுக - அதிமுக இடையே காரசார  விவாதம் நடைபெற்றது.

மழை பாதிப்புகளை முறையாக கையாண்டது யார்? - திமுக - அதிமுக இடையே காரசார  விவாதம்!!

சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், கடந்த ஆண்டில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளையும், நிவாரண பணிகளையும் அரசு உரிய முறையில் கையாளவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, முதலமைச்சர் மழை வெள்ளம் சூழ்ந்திருந்த 45 நாட்களும் தண்ணீரில் கால் வைத்து, வடிகால் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டதாகவும் 120 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதாவும் குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், சென்னை மாம்பலத்தில் அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்டு விளக்கமளித்த அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்திய திட்டம் என்றும், கடந்த 3 ஆண்டுகளில் மழை பெய்த போது மாம்பலம் பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை எனவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும் தண்ணீர் தேங்கியதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், மேற்கு மாம்பலம் பகுதியில் வடிகால் பணிகளை முறையாக கவனிக்காமல் இருந்தததால் தான்  பாதிப்பு ஏற்பட்டது என தெரிவித்தார்.