தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை தாக்கல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நாளை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ள மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் சிற்பங்கள் அமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உதகை தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி நாளை தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.
காண்பவர் கண்களை கவர்ந்து இழுக்கும் கலை நயம் மிக்க மலர் அலங்கார கண்காட்சியை பார்வையிட ஏராளாமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில், சிறப்பு வாய்ந்த மலர் அலங்காரத்தை நாளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
இதையடுத்து பூங்காவினுள் நுழைவு பகுதியில் மலர்களால் தோரண வாயில்கள், மாடங்களில் பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர்களை அலங்கரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறாமல் இருந்த மலர்க்கண்காட்சி தற்போது நடைபெறுவதால் பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக பாமக ஆதரவு அறித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கு ஜுன் 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில், காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 3 இடங்களில் திமுக தனது வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்தது..
இந்த நிலையில், சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து மாநிலங்களவை தேர்தலுக்கு ஆதரவு கோரினர்.
இதனை ஏற்று அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அதேபோல் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் அதிமுக, பாமக பாஜக தனித்து போட்டியிட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அதிமுக சார்பில் 2 மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக ஓபிஎஸ் ஈபிஎஸ் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு வேட்பாளர் பெயர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பள்ளி மாணவனை 10க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கோணம்பேடு பள்ளியை சேர்ந்த மாணவ - மாணவியர் பொதுத்தேர்வு எழுத வந்தனர்.
அப்போது அரசு பள்ளி மாணவர்கள், அப்பள்ளி மாணவிகளை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனை மாணவிகள் சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த சிபி என்ற மாணவனை, கோணம்பேடு பள்ளி மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த பள்ளி மாணவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இதுத்தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தின் நன்னீர் ஏரிகளின் ஒன்றான கொடைக்கானல் கூக்கால் ஏரி, சுற்றுலாப் பயணிகளால் தூக்கி வீசப்படும் குப்பைகள் மற்றும் மது பாட்டில்களால் மாசடைந்து வருகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில், கூக்கால் மற்றும் பேரிஜம் ஆகியவை நன்னீர் ஏரிகளாக உள்ளன. இதில் வனத்துறை அனுமதி பெற்றால் மட்டுமே பேரிஜம் ஏரிக்குச் செல்ல முடியும் என்பதால் இன்று வரை பாதுகாப்பான சூழலில் உள்ளது.
ஆனால் கூக்கால் ஏரியானது கூக்கால் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ளதால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், அந்த ஏரியில், மது பாட்டில்கள் மற்றும் நெகிழி குப்பைகளை வீசிச் செல்வதால் ஏரி மாசுபட்டு வருகிறது.
கூக்கால் ஊராட்சி நிர்வாகம், மற்றும் வட்டார வளர்ச்சித்துறை இணைந்து, கூக்கால் ஏரி மாசடையாமல் பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாளை மறுநாள் முதல் 2 மாதங்களுக்கு மேட்டுப்பாளையம்- உதகை சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்காகவே உதகை மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் விரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் வரும் சனிக்கிழமை முதல் ஜூலை 22- ம் தேதி வரை 2 மாதங்களுக்கு நீலகிரி சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் காலை 11.25 மணிக்கு உதகையிலிருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். மறு மார்க்கத்தில் காலை 9. 10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2.25 க்கு உதகை சென்றடையும்.
சிறப்பு மலை ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு பயணிக்க முதல் வகுப்பிற்கு 600 ரூபாய், 2-ம் வகுப்பு 295 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதல் வகுப்புக்கு 445 ரூபாய், இரண்டாம் வகுப்பு 190 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.