அரசியலில் புயலை கிளப்புமா..? நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு...

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிடுகிறார். 

அரசியலில் புயலை கிளப்புமா..? நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு...

நிதியமைச்சராக பொறுப்பேற்ற பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் வெளியிடுகிறார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதால், அது அரசியல் சூட்டை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளாக நிதி மேலாண்மை மிகவும் மோசமாக இருந்ததாக திமுக சார்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது.

இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் அரசுக்கு நிதி நெருக்கடி நீடிப்பதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதேபோல், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 2001-ல் அ.தி.மு.க. ஆட்சியின்போது நிதியமைச்சராக இருந்த பொன்னையன், பட்ஜெட் தாக்கலின்போது நிதிநிலைமை குறித்த வெள்ளைஅறிக்கையை வெளியிட்டார். ஆனால், இப்போது பட்ஜெட் தாக்கலுக்கு 4 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளை அறிக்கை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.