அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரை...அரசியல் எதிரியாகக் கருதி அடக்குமுறையை ஏவுவதா? சீமான் கண்டனம்!

அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரை...அரசியல் எதிரியாகக் கருதி அடக்குமுறையை ஏவுவதா? சீமான் கண்டனம்!

அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரை அரசியல் எதிரியாகக் கருதி அடக்குமுறையை ஏவுவதா? என  சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பை திரைப்பட நகைச்சுவைத்துணுக்கோடு பொருத்தி இணையத்தில் விமர்சித்ததற்காக பிரதீப் எனும் இளைஞரைக் கைதுசெய்திருப்பது ஏற்புடையதல்ல என்றும், மாற்றுக்கருத்துடையோரையும், அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரையும் அரசியல் எதிரிகளாகக் கட்டமைத்து, அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

தேர்தல் அறிக்கையில், தமிழகத்திலுள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்; இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பயனடைவார்கள் எனக் கூறிவிட்டு, இப்போது தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை என திமுக அரசு மாற்றிப்பேசி, தகுதி எனும் சொல்லாடலை புதிதாக இடைச்சொருகும்போது எழும் விமர்சனத்தைத்தான் திரைப்படத்தின் நகைச்சுவைக்காட்சியோடு இணைத்து எள்ளல் செய்திருக்கிறார் தம்பி பிரதீப். கேலிச்சித்திரங்களின் நவீனப்பரிணாம வளர்ச்சிதான் இதுபோன்ற காணொளி நகைச்சுவைத்துண்டுகள்.

அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காகவே கைது நடவடிக்கை என்பது மிக மிக அதீதமானது. சமூகத்தைப் பிளவுபடுத்தும், மண்ணுக்கும், மக்களுக்கும் பெருங்கேட்டை விளைவிக்கும் எத்தனையோ பேரைக் கைதுசெய்ய மறுக்கும் திமுக அரசு, எளிய மக்களின் விமர்சனங்களைச் சகிக்க முடியாது, அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்த எண்ணுவது ஜனநாயக விரோதமாகும் என்று கூறியுள்ளார்.