மாதந்தோறும் 1000...மார்ச் ஒன்றா? ஜூன் மூன்றா? ஆனா முன்னோட்டம் ரெடியாமே?

மாதந்தோறும் 1000...மார்ச் ஒன்றா? ஜூன் மூன்றா? ஆனா முன்னோட்டம் ரெடியாமே?

குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு முன்பாக முன்னோட்டமாக ஒரு ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் ஏற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமான வாக்குறுதி:

திமுக தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானதாக அனைவராலும் பார்க்கப்பட்ட ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் வழங்கப்படும் திட்டம்  என்பது தான். ஆனால், அந்த திட்டம் இந்நாள் வரை அமலுக்கு வரவில்லை. 

உறுதியளித்த முதலமைச்சர்:

இதனிடையே, இந்த திட்டம் நிறைவேற்றபடாதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, மாநிலத்தின் நிதிநிலைமை சரியில்லாததால் சற்று காலதாமதமாகும் என்று தெரிவித்தார். நிதிநிலைமை சரியானதும் நிச்சயம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள்:

ஆனால், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் எப்பொழுது தொடங்கப்படும் மகளிர் மத்தியில் மட்டுமல்லாமல், எதிர்கட்சிகள் சார்பிலும் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. 

இதையும் படிக்க: சென்னையில் அம்மா உணவகங்கள் மூடப்படுமா? மேயர் பிரியா சொன்ன பதில் என்ன?

மார்ச் 8 தொடங்கப்படுமா?:

சமீபத்தில் உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனை கூட்டத்தையடுத்து, மார்ச் 8 ஆம் தேதி இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் என்ற திட்டம் அமலுக்கு வருமா? வராதா? என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் வட்டமடித்து வந்தது.

முன்னோட்டம் ரெடியா?

இந்நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் திட்டம், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1 ஆம் தேதியோ அல்லது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதியோ தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக பொங்கல் பரிசுத் தொகையாக 1000 ரூபாயை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு 1000ரூபாய் அவர்களது வங்கிக்கணக்கில் ஏற்றி விடப்படும்.

மார்ச் மாதமா? ஜுன் மாதமா?

இது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதாவது பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் மாதாந்திர தொகை திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளதால், மாதந்தோறும் 1000 வழங்கு திட்டம் மார்ச் 1 ஆம் தேதியோ? அல்லது ஜூன் 3 ஆம் தேதியோ? வழங்கப்படும் என கூறப்படுகிறது.