மோசமான வானிலையால் ஏற்பட்ட விபத்து..? ஹெலிகாப்டர் விபத்து குறித்து முழு தகவல் எப்போது..? 

நீலகிரி மாவட்டம் குன்னுர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மோசமான வானிலையால் ஏற்பட்ட விபத்து..? ஹெலிகாப்டர் விபத்து குறித்து முழு தகவல் எப்போது..? 

கடந்த  டிசம்பர் 8-ம் தேதி முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்த Mi17v5 ரக ஹெலிகாப்டர் குன்னூர் மலைப் பகுதியில்  விபத்துக்குள்ளானது.

இதில், பயணித்த 14 பேரும் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து குறித்து, விமானப்படை தலைமை பயிற்சி கட்டளைத் தளபதி ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் விமானத் தரவு ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவை மீட்கப்பட்டு, விபத்துக்கு முந்தைய கடைசி தருணங்கள் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன.

இந்நிலையில், விசாரணை அறிக்கை தயார் செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஹெலிகாப்டர் பைலட் கட்டுப்பாட்டில் இருந்தும், மோசமான வானிலை காரணமாக நிலப்பரப்பில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. 

எனினும் அடுத்த வாரத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உள்ள நிலையில் அவற்றிக்கு பிறகு விபத்து குறித்து முழு தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.