நீட் தேர்வுக்கு ஆதரவான பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எடப்பாடியின் பதில் என்ன.? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி.!  

நீட் தேர்வுக்கு ஆதரவான பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எடப்பாடியின் பதில் என்ன.? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி.!  

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வுக்கு ஆதரவான பாஜகவின் நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா ஷேஷைய்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆய்வுக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளைப் பயன்படுத்தி, டெல்டா ப்ளஸ் வைரஸ் தொடர்பாக ஆராய புதிய ஆய்வகம் அமைக்கப்படும் என்றும், நீட் தேர்வின் பாதிப்பு பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஏ.கே. ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு பாதிப்பை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி வழங்கியிருந்ததன் அடிப்படையில், சட்ட ரீதியாக நீட் தேர்வு பாதிப்புகளை பிரதிபலிக்கவே ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டதாகவும், சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், அரசின் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பாஜக துணை நிற்கும் என்று கூறியிருந்ததாகவும், இதற்கு நேர்மாறாக பாஜக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்ந்திருப்பது, பாஜகவின் இரட்டை வேடத்தை உணர்த்தியிருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மேலும் நீட் உண்டா? இல்லையா? என்று கேட்கும் முன்னாள் முதலமைச்சர், நீட் தேர்வுக்கு ஆதரவான பாஜகவின் நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், இதை எதிர்க்கட்சித் தலைவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏ.கே.ராஜன் குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கான பதிலை, தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் அபிடவிட்டாக தாக்கல் செய்யும் என்று கூறிய அமைச்சர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீட்டு வருவதற்கான காரணமே திமுக தான் என்றும், எந்த நுழைவுத் தேர்வையும் திமுக ஏற்காது என்றும், நடப்பு ஆண்டில் நீட் தேர்வு நடைபெறுமா? என்பதை
ஏ.கே.ராஜன் குழு வழங்கும் பரிந்துரைக்குப் பின் முதலமைச்சர் ஆராய்ந்து முடிவு எடுப்பார் என்றும் கூறினார்.