நீட் தேர்வு விலக்கு கடிதத்திற்கு நல்ல வரவேற்பு ..அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீட் தேர்வு விலக்கு ஆதரவு கேட்டு 12 மாநில முதல்வர்களுக்கு கொடுத்துவரும் கடிதத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விலக்கு கடிதத்திற்கு நல்ல வரவேற்பு ..அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை சைதாப்பேட்டை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய வகுப்பறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நீட் தேர்வு விலக்கிற்கு ஆதரவு கேட்டு 12 மாநில முதல்வர்களை திமுக எம்.பிக்கள் சந்தித்து நீதியரசர் ஏ.கே.ராஜன் அறிக்கையை கொடுத்து வருகிறார்கள். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர் 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாதிப்பு குறைகிறது என்பதால் மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருக்கக் கூடாது என கூறினார்.

கல்லூரிகள் திறக்கப்படும் போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும்  நவம்பர் 1 - ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது எடுக்கப்படும் என்றார்.

2015 - ம் ஆண்டு முன்னறிவிப்பு இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட சம்பவம் போல் இனி நடைபெறாது என கூறிய அவர்,  தற்போதைய முதல்வர் சாதாரண அதிகாரிகளின் பணிகளை கூட ஆய்வு செய்து  வருகிறார். எனவே கடந்த காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது போன்ற ஒரு நிலை சென்னைக்கு வராது என தெரிவித்தார்.