மழையில் நனைந்த பருத்தி மூட்டைக்கு எடை குறைப்பு.. அதிகாரிகளின் செயலுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!!

மழையில் நனைந்த பருத்தி மூட்டைக்கு எடை குறைப்பு.. அதிகாரிகளின் செயலுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!!

சேலம் அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், மழையில் நனைந்த பருத்தி மூட்டைக்கு 2 கிலோ வரை எடை குறைத்து கணக்கிடுவதாகக் கூறி, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கொண்டு வரும் பருத்தி மூட்டைகளை, வியாபாரிகள் ஏலம் எடுப்பர். கோடிகணக்கான ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் சாலை மறியல்

இந்நிலையில், கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள் அனைத்தும் திடீரென பெய்த மழையில் நனைந்ததாக கூறப்படுகிறது. இதனால், மூட்டை ஒன்றுக்கு 2 கிலோ வரை குறைத்து கணக்கிடுவோம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், சேலம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை பிறகு ஏலம்

அப்போது அங்கு சென்ற காவல்துறையினர், அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு ஏலம் தொடங்கியது.

விவசாயிகள் கவலை

மேலும், கொங்கணாபுரத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், பருத்தி மூட்டைகளுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.