”பலவீனமான பெண்கள்” - குடியரசு தலைவரை அவமதிக்கும் வகையில் விமர்சிக்கிறார் கார்கே” - நிர்மலா சீதாராமன்

”பலவீனமான பெண்கள்” - குடியரசு தலைவரை அவமதிக்கும் வகையில் விமர்சிக்கிறார் கார்கே” -  நிர்மலா சீதாராமன்

பலவீனமான பெண்கள் என எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதை எதிர்த்து பாஜகவினர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நாளை வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை இன்று முதன்முதலாக கூடியது. அப்போது பேசிய பிரதமர் மோடி, மாநிலங்களவையில் தங்களுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும் அரசியல் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் நலனுக்காக கூட்டாக முடிவெடுப்போம் எனக் கூறினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவாதத்திற்கு வரும்போது, ஒருமனதாக அதனை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

இதைத்தொடர்ந்து, பேசிய மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 2010 -ம் ஆண்டே மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்ததாகக் கூறினார். கல்வியறிவு குறைவாக உள்ள பலவீனமான பட்டியலினப் பெண்களை அரசியல் கட்சிகள் குறிவைத்து தேர்ந்தெடுப்பதாகவும் படித்த மற்றும் போராடும் பெண்களை சீண்டுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். 

குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் பெண்களை எதிர்கட்சித் தலைவர் விமர்சிக்கிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியதை அடுத்து சலசலப்பு நீடித்தது. இதைத்தொடர்ந்து, நாளை வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க   | ”பலவீனமான பெண்களை பாஜக குறிவைத்து தேர்ந்தெடுக்கிறது” - கார்கே குற்றச்சாட்டு