நளினியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது: உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெறுவோம் - வழக்கறிஞர்!

தம்மை விடுதலை செய்யக் கோரிய நளினியின் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெறுவோம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நளினியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது: உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெறுவோம் - வழக்கறிஞர்!

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தங்களையும் விடுவிக்கக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் தனக்குரிய பிரத்யேக வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலையானார் என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆளுநரின் ஒப்புதல் இன்றி, தங்களால் இந்த வழக்கில் அதுபோல் செயல்பட முடியாது எனவும், சட்டத்திற்கு உட்பட்டு முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்துக்கு உள்ள பிரத்யேக அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கும் உள்ள நிலையில், அதனை பயன்படுத்தி விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்தோம் என நளினி தரப்பு வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒருவரை விடுவித்துள்ள போது, மற்றவர்களை விடுவிக்கத் தயங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது எனவும், விரைவில் உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெறுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.