மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் குட்டிகளை கூட்டத்துடன் சேர்ப்போம் - தமிழ்நாடு அரசு

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் குட்டிகளை கூட்டத்துடன் சேர்ப்போம் - தமிழ்நாடு அரசு
Published on
Updated on
2 min read

தருமபுரி மாவட்டம்,  மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி  2 பெண் யானைகள் மற்றும் ஒரு ஆண் யானை என மூன்று காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

 உயிர்தப்பிய இரண்டு குட்டி யானைகளை, பாதுகாத்து காட்டுக்குள் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று  விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தாயை இழந்து தவிக்கும் இரு குட்டியானைகளையும் யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிக்க வேண்டும் எனவும், ஒரு வேளை அந்த குட்டியானைகளை சேர்த்துக் கொள்ளாவிட்டால் அவற்றை முகாம்களில் வைத்து பராமரிக்கலாம் என்பது தான் நடைமுறை என முரளிதரன், வழக்கறிஞர் சொக்கலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர்.

ஏற்கனவே தாயை பிரிந்த அம்முகுட்டி என்ற குட்டி யானையை மீண்டும் கூட்டத்தில் சேர்க்க முயற்சித்த போது அதை சேர்த்துக் கொள்ளாததால் முதுமலை முகாமில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், இதன் அடிப்படையில் எலிபண்ட் விஸ்பர்ஸ் என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இறந்து கிடக்கும் யானைகளைச் சுற்றி குட்டி யானைகள் அழுதபடி சோகத்துடன் வலம் வருவது குறித்த காட்சிகள் நீதிபதிகளுக்கு காட்டப்பட்டன. இதை பார்த்த நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது

அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன் தமிழ்நாடு வனத்துறையின் அறிக்கையை  தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்திருந்த விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் அந்த அறிக்கையில், இரு குட்டிகளை வனத்துறையினர் பாதுகாத்து, பராமரிக்க, உணவளிக்க ஒசூர் கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் 10 வனத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,   லேக்டோஜென், குளுகோஸ், வழங்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.மேலும், அருகில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டத்தை அடையாளம் காண தனிக்குழு

தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், யானைக் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டதும் அதனுடன் இரு குட்டிகளையும் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் எனவும் முடியாவிட்டால் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு மாற்றப்பட்டு பராமரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யானைகள் பலியான சம்பவம் துரதிருஷ்டவசமானது

மின்வேலியில் சிக்கி, யானைகள் பலியான சம்பவம் துரதிருஷ்டவசமானது எனத் தெரிவித்த அரசு கூடுதல் தலைமை  வழக்கறிஞர் ரவீந்திரன், ஏற்கனவே பாலக்காட்டில் இருந்து இரு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, குட்டி யானைகளுக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றி இரு குட்டி யானைகளும் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குட்டி யானைகளை கூட்டத்துடன் சேர்க்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். பின், இந்த வழக்கின் விசாரணையை வனபாதுபாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com