
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்கினை எட்ட வழிவகுக்கும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கு, வெளிநாட்டு சுற்றுலா பயணம் மேற்கொண்டு போடப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த முடியாத காரணத்தால், ஒரு சிலர் விமர்சனம் செய்து வருவதாகவும், அது அவர்களின் இயலாமையை காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழனின் வளர்ச்சிதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாட்டில் தொழில்களை துவங்க அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையினை குறை கூறுவதற்கு முன்பு பேரறிஞர் அண்ணா, கலைஞர் நூல்களை படித்து பார்க்க வேண்டும் என கூறிய துணை சாபாநாயகர் பிச்சாண்டி,
தமிழகத்தை தொழில் வளம் மிக்க நாடாக மாற்றும் முயற்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்திட தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய அவர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகளை தூர்வாரி செப்பனிட்டு அந்த நீரை சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்திட தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.